பொறுமை
October 28, 2009நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (2:155)
(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். (2:156)
அன்றியும், (அல்லாஹ்வின் பாதையில் போரிடும்) உங்களிலிருந்துள்ள முஜாஹிதுகளையும், பொறுமையாளர்களையும் நாம் அறியும் வரை உங்களை நிச்சயமாக நாம் சோதிப்போம்; உங்கள் செய்திகளையும் நாம் சோதிப்போம் (அவற்றின் உண்மையை வெளிப்படுத்துவதற்காக). (47:31)
ஒரு முஃமினுக்கு இன்பம் ஏற்பட்டால் அதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறான், அது அவனுக்கு நன்மையாக ஆகின்றது. அவனுக்கு துன்பம் ஏற்படுமானால் அதை சகித்துக்கொள்கிறான், அதுவும் அவனுக்கு நன்மையாகி விடுகின்றது. ஆக முஃமினுக்கு எது நடந்தாலும் அனைத்துமே நன்மையாக அமைவது ஆச்சிரியமான ஒன்றாகும்.
ஸுஹைப் இப்னு ஸினான்(ரலி) : முஸ்லிம்
(கடந்த கால) நபிமார்களில் ஒரு நபியைப்பற்றி நபி(ஸல்) குறிப்பிடும் போது அவரை அவரது சமுதாயத்தினர் அடித்துக் காயப்படுத்தினார்கள். அவர் தன் முகத்திலிருந்து இரத்தத்தைத் துடைத்துக் கொண்டு “இறைவா! என் சமுதாயத்தை மன்னித்துவிடு! அவர்கள் அறியாத மக்களாக உள்ளனர்” என்று கூறியதாக நபி(ஸல்) குறிப்பிட்டார்கள்.
இப்னுமஸ்வூது(ரலி) : புகாரி, முஸ்லிம்
ஒரு முஸ்லிமுக்கு எற்படும் சிரமங்கள் நோய்கள், கஷ்டங்கள், கவலைகள், வேதனைகள், அவனது காலில் தைத்து விடும் முள் உட்பட எதுவானாலும் அவற்றை அவனது தவறுகளுக்கு இறைவன் பரிகாரமாக ஆக்கி விடுகின்றான் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அபூஹுரைரா(ரலி), அபூஸயீத்(ரலி) : புகாரி, முஸ்லிம்
”கன்னத்தில் அடித்துக் கொள்பவனும், சட்டைகளைக் கிழித்துக் கொள்பவனும், முட்டாள் தனமாக புலம்புபவனும் நம்மைச் சேர்ந்தவனல்லன்” என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அப்துல்லாஹ்பின் மஸ்வூது(ரலி) : புகாரி, முஸ்லிம், நஸயீ
”யார் சுய மரியாதையுடன் நடக்க விரும்புகின்றாரோ அவரை சுயமரியாதையுடன் இறைவன் வாழச் செய்கிறான். பிறரது உதவியை எதிர்பார்க்காது இருக்க விரும்பக்கூடியவரை, எவரிடமும் தேவையற்றவராக இறைவன் ஆக்குகின்றான். யார் பொறுமையை மேற்கொள்ள முயற்சிக்கிறாரோ அவரைப் பொறுமையாளராக அல்லாஹ் ஆக்குகின்றான், பொறுமையைவிட பரந்த அருட்கொடை எதையும் எவரும் கொடுக்கப் படுவதில்லை”
ஸஃது இப்னு ஸினான்(ரலி) : புகாரி, முஸ்லிம்
ஒருவரது கண்களை நான் கைப்பற்றிக் கொண்டபின் அதை எனது அடியார் சகித்துக் கொண்டால் அதற்கு சுவர்க்கத்தைக் தவிர வேறு பரிசு இல்லை என்று அல்லாஹ் கூறுகிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அபூஹுரைரா(ரலி) : புகாரி
”அல்லாஹ் யாருக்கு நன்மையை நாடுகின்றானோ அவரை அல்லாஹ் சோதிப்பான்”
அபூஹுரைரா(ரலி) : புகாரி
”எனது முஃமினான அடியாரின் குடும்பத்தில் அவருக்கு விருப்பமானவரை நான் கைப்பற்றிக் கொள்ளும்போது அதை அவர் பொறுத்துக் கொண்டால் சுவர்க்கம் தான் அவருக்கான கூலி” என்று அல்லாஹ் கூறுகிறான் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அனஸ்(ரலி) : புகாரி
”பாதிக்கப்பட்டவுடன் மேற்கொள்வதே பொறுமையாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அனஸ்(ரலி) : புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ
”மக்களோடு கலந்து வாழ்ந்து அவர்களினால் ஏற்படும் தொல்லைகளை பொறுத்துக் கொள்பவன், மக்களோடு கலந்து வாழாது அவர்களின் தொல்லைகளை பொறுத்துக் கொள்ளாதவனை விட சிறந்தவனாவான்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இப்னு உமர்(ரலி) : திர்மிதீ
Posted by salavu deen.